சிஎஸ்கே தோற்றதை கிண்டல் செய்ததால் ஆத்திரம்- இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்

 
attack

சேப்பாக்கம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால் கிண்டல் செய்த நபரை சக நண்பர்கள் தாக்கியதில், காயமடைந்த ஜீவரத்தினம் என்பவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகரில் மது அருந்திவிட்டு, நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேஞ்சஸ் பெங்களூர் கிரிக்கெட் மேட்ச் பார்த்துள்ளனர். இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.  சென்னை அணிக்கு ஆதரவாக பேசிய தனது நண்பர்களை வேளச்சேரியை சேர்ந்த ஜீவரத்தினம்(27) என்பவர் கிண்டல் செய்தார். இதனால் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

சென்னை அணியின் ஆதரவாளர்களான கல்லுக்குட்டை அப்பு ஜெகதீஷ், ரமேஷ் உள்ளிட்டோர் கைகளாலும், மது அருந்திய இடத்தில் கிடந்த கூர்மையான பொருட்களாலும் ஜீவரத்தினத்தை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜீவ ரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துரைப் பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லுக்குட்டை அப்பு, ஜெகதீஷ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர், அவரை தாக்கியவர்கள் என அனைவருமே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் விசாரித்த போது, குடிபோதையில் நின்ற  15 இளைஞர்கள் திடீரென, அவர்களுக்குள்ளேயே ஒருவரை சரமாரியாக தாக்கியதுடன் தர தரவென இழுத்துச் சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்து சூறையாடி விட்டு சென்றுள்ளனர்.