கட்டுப்பாட்டை இழந்த தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்த கார் !

 
accident

திடீர் கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக காரில் பயணித்த 5 பேர் நீந்தி உயிர் தப்பித்தனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே புதுவை மாநிலத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. நேற்று இரவு இந்த தரைப்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூரில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்த நிலையில் தரைப்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தென்பெண்ணை ஆற்றில் இருந்த தண்ணீரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் கவிழ்ந்த வேகத்தில் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதை அடுத்து காரில் பயணம் செய்த ஐந்து பேர் காருக்குள் மாட்டிக் கொண்டு தத்தளித்தனர். இவர்கள் 5 பேரும் காரின் கதவை உடைத்து தண்ணீரில் நீந்தி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேர்ந்தவர்கள் சிவபாலன், சுந்தர் உள்பட ஐந்து பேர் கடலூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். பின்னர் புதுவை மாநிலம் வில்லியனூருக்கு செல்வதற்காக கலெக்டர் அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தபோது கும்தாமேடு வழியாக செல்வதற்காக தரைப்பாலத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது திடீர் கனமழை காரணமாக எதிர்பாராமல் தென்பெண்ணையாற்றில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. தண்ணீரில் மூழ்கிய காரை இன்று பொக்களின் எந்திரன் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டது. அடிக்கடி விபத்து நடப்பதால் இந்த தரைபாலத்தில் நான்கு சக்கர வாகனம் செல்ல தடைசெய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனார்.