‘எங்களுடையது கொள்கைக் கூட்டணி..’ ஜோசியராக மாறிய இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்..
தேர்தலுக்காகவோ, பதவிக்கு வர வேண்டும் என்றோ உருவாக்கப்பட்டது அல்ல திமுக கூட்டணி, இது கொள்கைக் கூட்டனி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவது தான் திமுகவின் நோக்கம். மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடிப் பதுங்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருந்தாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வர மாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வர மாட்டார்.
எடப்பாடி பழனிசாமி கற்பனையில்தான் மிதந்து கொண்டிருக்கிறார் என நினைத்தேன். ஆனால் திமுக கூட்டணி உடைந்து விடும் எனக் கூறி அவர் ஜோசியராகவே மாறியுள்ளார். தன் கட்சியை வளர்க்க முடியாத அவர், அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்கிற விரத்தியிலும், திமுகவின் செல்வாக்கு உயர்கிறது என்கிற ஆதங்கத்திலும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்களே அதுபோல எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் பொறாமையில் பேசி வருகிறார். திமுக கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம் ஆனால் விரிசல் ஏற்படாது எங்கள் கூட்டணி தேர்தலுக்காகவோ பதவிக்கு வர வேண்டும் என்ற உருவாக்கப்பட்டது அல்ல இது கொள்கை கூட்டணி" என்று தெரிவித்தார்.