தவெக மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனை..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக். 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழ்கம் கட்சியின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்குகிறார். மாநில நிர்வாகிகள், மவட்ட செயலாளர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இந்தக்கூட்டத்தில், மாநாடு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மாநாட்டிற்கு மாவட்ட வாரியாக எவ்வளவு தொண்டர்கள் அழைத்துவரப்பட வேண்டும், காவல்துறையினரின் விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது, சிறப்புற மாநாட்டை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.


