VGP பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக மூட உத்தரவு!
இயந்திர கோளாறு பிரச்சனையை தொடர்ந்து VGP பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக மூட சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஈசிஆர் அருகே இயங்கி வரும் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சுமார் 7 மணியளவில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதில் சாகச பயணம் மேற்கொண்ட 30க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக முயற்சித்தனர். இதன் விளைவாக 3 மணி நேரமாக அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 70 அடி உயரத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு, வெளியில் அனுப்பப்பட்டனர். ராட்டினத்தில் சிக்கியோரில் ராட்சத கிரேன் உதவியுடன் குழந்தைகள், பெண்கள் முதலில் மீட்கப்பட்ட நிலையில், பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், இயந்திர கோளாறு பிரச்சனையை தொடர்ந்து VGP பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக மூட சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராட்டினம் பழுதாகி 36 பேர் அந்தரத்தில் தொங்கிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று பூங்காவில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.


