HMPV வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

 
ops

HMPV வகை தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமையாகும். கொரோனா என்னும் கொடிய நோய்த் தாக்கத்திலிருந்து முழுவதும் விடுபட்டு இயல்பான நிலைமைக்கு மக்கள் திரும்பியுள்ள நிலையில், ஹியுமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) என்ற நோய் சீனாவில் அதிகமாக பரவி, அதிகளவில் அங்குள்ள மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கும், தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கும் என மொத்தம் ஐந்து குழந்தைகளுக்கு இந்தத் தொற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு குழந்தை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பிவிட்டதாகவும், மற்ற குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு பயணம் செய்ததாக எந்தப் பதிவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. முகக் கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.

ops

இந்தியா முழுவதும் ஐந்து குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனை முழுமையாகத் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டிற்குள் நுழையும் நபர்களுக்கு நோய்த் தொற்றிற்கான அறிகுறி இருக்கிறதா என்பதை கண்டறியவும், நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோய்த் தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான முன் ஏற்பாடுகளை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.