வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்க - ஓபிஎஸ் வலியுறுத்தல்..
வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் புயல் வெள்ளக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த, மழைநீர்க் கால்வாய்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கி, சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் வகையில், மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க. தனது நேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில், வட கிழக்கு பருவமழையின்போது, சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பதும், பல இடங்களில் பொதுமக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதும், பொதுமக்களின் உடைமைகள் பறிபோனது என்பதும், உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க இரண்டு மாதங்களே உள்ளன. ' இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு, இயல்பை மீறி தென்பேற்கு பருவபழை பெய்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும் என்றாலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், திருவான்மியூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, டைடல் பார்க், சூளைமேடு, வளசரவாக்கம், மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப் பாதை, மந்தைவெளி பேருந்து நிலையம், அய்யப்பன்தாங்கல், திருவேற்காடு என பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இது போதாது என்று, மெட்ரோ ரயில் பணி, சென்னை மெட்ரோ பணி, மாநகராட்சிப் பணி, மின் துறை பணி, வடிகால் பணி, பாதாள சாக்கடை பணி என பல்வேறு பணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக எங்கு பள்ளம் இருக்கிறது என்று தெரியாமல் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சாதாரண மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தால் என்ன நிலைமை உருவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகும். எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, அனைத்து வெள்ளத் தடுப்புப் பணிகளும் முடிக்கப்பட வேண்டுமென்றும், சென்ற ஆண்டு ஏற்பட்ட நிலைமை இந்த ஆண்டு ஏற்படக்கூடாது என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பினைக் கருத்தில் கொண்டு, வெள்ளத் தடுப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளையும் முன்கூட்டியே முடித்து, ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடவும், மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் பெயர் பலகைகளை வைத்து, அங்குள்ள பள்ளங்களை இரும்பினால் ஆன தட்டிகளை கொண்டு மறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.