தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை நிரந்தரம் செய்க - ஓபிஎஸ் வலியுறுத்தல்..

 
Ops

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என   ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ உலக செவிலியர்கள் தினத்தன்று தங்களுடைய ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், அந்த அளவுக்கு அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசு செவிலியர்களுடைய வாழ்வில் ஒளியேற்றவில்லை. மாறாக. வலியேற்றிக் கொண்டிருக்கிறது.  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், பின்னர் அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

nurse

8  ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும்,   கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் பணி இன்னமும் நிரந்தரம் செய்யப்படவில்லை.  இதன் காரணமாக மகப்பேறு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு, இதர படிகள் என எந்தச் சலுகையினையும் அனுபவிக்க முடியாமல் அல்லல்படுவதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். ஊதியத் தொகை 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைப்படுத்தப்படவில்லை . காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இதனை அரசு மேற்கொண்டால் தங்களது பணி தானாகவே நிரந்தரமாகிவிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.

 செவிலியர்கள் போராட்டம்!

இதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.  முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் உடனடியாக முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக  சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.