ஆட்சியை கவிழ்க்க பார்த்த ஓபிஎஸ்.. என்ன தவறு செய்தேன் என கேட்பதா? - விளாசித் தள்ளிய வைகைச்செல்வன்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தொடர்பாக கூறிய கருத்திற்கு பதிலளித்த வைகைச்செல்வன், ''அவரவர் தங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் துணைவியார் சௌமியா அன்புமணி இன்று உத்திரமேரூர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு பாமகவின் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். அது நிச்சயமாக அதிமுக என்கிற ஒரு பெரிய வாகனத்தில் ஏறி வெற்றிச் சரித்திரத்தைப் படைக்கும்" எனத் தெரிவித்தார்.
மேலும், சசிகலா தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தது அரசியலில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய இயக்கம்; அது ஒரு மலை. அந்த மலையோடு மோதினால், தலைதான் உடையும். அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் இது தொண்டர்களால் கட்டியமைக்கப்பட்ட இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா, அதற்குப் பிறகு எத்தனையோ தலைவர்கள் வந்து பார்த்தார்கள். இன்று எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆகவே, தொண்டர்களுக்கு யார் துணையாக, தூணாக, அரவணைப்போடு இருக்கிறார்களோ, அவர்களைத்தான் அவர்கள் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள். அப்படிப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி ஆரம்பித்து த.வெ.க-விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, "பண்ருட்டியார் கட்சியில் இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். ஒருவர் பண்ருட்டியார், இன்னொருவர்... உங்களுக்குத் தெரியும், அவர் பொதுச்செயலாளர். ஆகவே, இந்த இரண்டு பேரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?" என்றார்.
தொடர்ந்து, 'நான் என்ன தவறு செய்தேன்?' என்று ஓ.பி.எஸ். கேட்டதற்குப் பதிலளித்த அவர், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்தார். இரண்டாவதாக, தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கினார். மூன்றாவதாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குச் சொந்தம் என்று சொல்லி, பல்வேறு வழக்குகளை அவர் போட்டிருக்கிறார். அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவையெல்லாம் தவறுகள்தான்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான பணிகளில் தானும் இணைந்துகொள்ள வேண்டும். இடையூறாக இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நசுக்கி, அதை அடித்து நொறுக்கி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது ஆட்சி கவிழ வேண்டும் என்று நினைத்து எதிர்த்து வாக்களித்தவர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கானவர்களா? இதை மக்கள் உணர்ந்தும், புரிந்தும் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

