ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் ஐக்கியம்

 
senthil murugan

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான செந்தில்முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், முன்னதாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பாளர் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ஒரே வேட்பாளராக தென்னரசு நிறுத்தப்பட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது. இதனிடையே செந்தில்முருகன் எடப்பாடி பழனிசாமி அணிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,  செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செந்தில் முருகன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.  இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக வலம் வந்த செந்தில் முருகன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.