பொதுச்செயலாளர் தேர்தலை சட்டரீதியாக சந்திப்போம் - பண்ருட்டி ராமச்சந்திரன்

 
panruti ramachandran

தேர்தலில் படுதோல்வியை சந்தித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்துவதாக தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  .அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், அவர் போட்டியிடின்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வாகிறார்.  

இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.  தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும். அதிமுக பொதுச்செயாலாளர் தேர்தலை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். யாரும் எதிர்ப்பாராத வகையில் தேர்தலை அறிவித்துள்ளனர். இனியும் திருந்துவார்கள் என  நினைக்கவில்லை.  படுதோல்வி அடைந்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திருந்துவதாக தெரியவில்லை. அதிமுகவை சீரழிக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.