ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்க - ஓபிஎஸ்

 
ops

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்யவும், வயது உச்ச வரம்பை உயர்த்தவும் தி.மு.க. அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""திராவிட மாடல் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்” என்று தி.மு.க. ஒருபுறம் நடத்திக் கொண்டிருந்தாலும், இது "சாதனையல்ல, சோதனை” என்று சொல்லும் அளவுக்கு காலவறையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 09-05-2023 முதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலைமைதான் அனைத்துத் தரப்பினரிடமும் காணப்படுகிறது.எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கிறபோது ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டினை கொள்கையாகக் கொண்டுள்ள கட்சி தி.மு.க. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தன் நிலைப்பாட்டை நிலைமைக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக்கூடிய கட்சி தி.மு.க. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2020 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

teachers

இதன் அடிப்படையில், "2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்" என இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 177-60 குறிப்பிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க தி.மு.க. அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று அறிக்கையின் வாயிலாக நான் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இன்னும் ஆட்சியாளர்களின் செவிகளை சென்றடையவில்லை போலும்!இன்று தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்து எவ்வித ஆணையையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை. மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. வாக்குறுதிக்கு முரணாக செயல்பட்டுவிட்டு, அதனைச் சாதனை என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபோது, ஆசிரியர் நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 57  என்றிருந்தது. தற்போது இந்த வயது உச்சவரம்பு 42-ஆக குறைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, தகுதியுடைய பெரும்பாலான ஆசிரியர்கள் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது.

ops

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்யப்பட வேண்டுமென்றும், வயது உச்சவரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். அண்மையில், "ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை" என்று கூறியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இன்று இந்த முறையை ஆசிரியர்கள் விஷயத்தில் முதலமைச்சரே கடைபிடிப்பது வேதனையளிக்கிறது.
தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.