ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

 
ops

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 9 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக விளங்கிய அரவிந்த் மாடு முட்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை வழங்கப்பட்டது. அரவிந்த்ராஜ் வயிற்றில் மாடு குத்தியதில் குடல் சரிந்து பலத்த காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் பெரிய சூரியர் ஜல்லிக்கட்டில் விளையாட்டை காணவந்த போது மாடு முட்டி   கண்ணக்கோண்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்பவர் பலியானார்.

Jallikattu

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், பாலமேட்டில்  நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு அதிக காளைகளை பிடித்த ஜல்லிக்கட்டு வீரர் திரு. ஆர். அரவிந்தராஜ் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை காணவந்த திரு. மா. அரவிந்த் ஆகியோர் எதிர்பாராதவிதமாக படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திரு. அரவிந்த்ராஜ் மற்றும் திரு. அரவிந்த் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

jallikattu

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது உயிரிழந்த 2 பேரின்  குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.