‘முல்லைப் பெரியாற்றில் புதிய அணை’ - கேரள அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!!

 
ops

2024-ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில் ‘முல்லைப் பெரியாற்றில் புதிய அணை’ என்று அறிவித்துள்ள கேரள அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ops

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதால், நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்ததாக, வலிமை வாய்ந்ததாக இன்றளவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பலமாகவும் உள்ளது என்று வல்லுநர் குழு அளித்த பரிந்துரையினை ஏற்ற உச்ச நீதிமன்றம், அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 27-02-2006 அன்று உத்தரவிட்டிருந்தது. இதனை தனது 07-05-2014 நாளைய தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகியும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அங்குள்ள மரங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ கேரள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிப்பதாகும். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், "முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கரையோரப் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே தீர்வு” என்று 2024 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில் கேரள அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிரான, சட்டத்திற்கு புறம்பான செயல்.

mullai

மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று அடிக்கடி குரல் எழுப்பி கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தோழமை கட்சி ஆளும் மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும்போது அதைத் தட்டிக் கேட்காமல் மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் தோழமைக் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்றால், தோழமை உணர்வுடன் பேசி தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதுதான் திறமையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழகத்துடன் சுமுக உடன்பாட்டுக்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசின் ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்தால், முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த அச்சத்திற்கு முக்கியக் காரணம், கச்சத்தீவு, ஜல்லிக்கட்டு விளையாட்டு, நீட் தேர்வு போன்றவற்றில் மாநிலத்தின் உரிமையை தி.மு.க. விட்டுக் கொடுத்து இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை ஏற்கெனவே வலுவாக உள்ள நிலையில், அங்கு புதிய அணை என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்று சொல்லிக் கொண்டு ‘உறவுக்கு மட்டும் கை கொடுப்பது' என்பதும், 'உரிமையை எப்போதும் விட்டுக் கொடுப்பது’ என்பதும் தமிழ்நாட்டிற்கு எதிரான செயல். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கேரள மாநில முதலமைச்சருடனும், கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும் தனக்குள்ள நெருக்கத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையினை மேலும் பலப்படுத்த ஏதுவாக அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியைப் பெற்று, கட்டுமானப் பணிகளை முல்லைப் பெரியாறு பகுதியில் மேற்கொள்ளவும், ‘புதிய அணை' என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை கேரள அரசுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கவும் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.