ரேஷன் கடைகளில் பொருட்கள் ஒரே நேரத்தில் கிடைக்க வழிசெய்க - ஓபிஎஸ் கோரிக்கை..

 
ration shop

நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் யாரும் பட்டினியின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் இலவச அரிசியை பெறுவதோடு மட்டுமல்லாமல், சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றையும் குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்று வருகின்றனர். ஆனால், இவற்றை சரியான அளவில் ஒரே நேரத்தில் பெற முடியாத அவல நிலை தற்போது நிலவி வருகிறது. 

ration

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில், அனைத்துப் பொருட்களும் அனைத்து நேரங்களிலும் இருப்பில் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சில நேர்வுகளில், முந்தைய மாதத்திற்குரிய பொருட்கள் அதற்கு அடுத்த மாதம் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, பொதுமக்கள் ஒரு மாதத்தில் பலமுறை நியாய விலைக் கடைகளுக்கு செல்லக்கூடிய அவல நிலை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் நியாய விலைக் கடைகள் சற்று தள்ளியிருப்பதால், நீண்ட நேரம் நடைபயணம் மேற்கொண்டோ அல்லது பேருந்தில் பயணம் செய்தோ செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன் விளைவாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக, நியாய விலைக் கடைகளுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை எல்லாம் ஊர்ஜிதம் செய்யும் விதமாக, மாதத்தின் கடைசி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், இந்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அனைத்து அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறியிருப்பதாக செய்தி வந்துள்ளது. அந்தந்த மாதத்துக்குரிய பொருட்களை அந்த 

ops

மாதத்தில் எந்தத் தேதியிலும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதேபோன்று, நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் எடை குறைவாக வழங்கப்படுவதால், வருகின்ற பொருட்களை பிரித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் தரமானதாகவும், எடை சரியானதாகவும் இருக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாதத்துக்குரிய பொருட்கள் அந்தந்த மாதத்தில் ஒரே நேரத்தில் கிடைக்கவும், தரமான மற்றும் சரியான எடை கொண்ட பொருட்களை வழங்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.