காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை...இதுதான் எடுத்துக்காட்டு - ஓபிஎஸ்

தமிழ்நாடு காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்பதற்கு காவல் துணை கண்காணிப்பாளரின் ராஜினாமா எடுத்துக்காட்டு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 45 மாத தி.மு.க. ஆட்சியில் கொலை குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவை அதிகமாகிக் கொண்டே வருவதற்கு காரணம், தமிழகக் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தமிழக காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது இதனை உறுதி செய்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், உலகப் பிரசித்திப் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வரும் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவியை அந்த வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனைத் தொடர்ந்து அவர் வேறு ஒரு நபருடன் பேசியதும், பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று காவல் துறை உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, இந்த வழக்கினை விசாரிக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவிற்கு உதவியாக சைபர் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ராகவேந்திரா கே. ரவி அவர்கள் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவில் உள்ள உயர் அதிகாரிகள் தன்னைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்றும், எனவே, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாகவும், மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் காவல் துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவில் உள்ள உயர் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டாலும், அந்த உயர் அதிகாரிகளுக்கு ஏதாவது அழுத்தம் அரசியல் ரீதியாக அளிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக, நலனுக்காக மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுப்பதை கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டிலோ வித்தியாசமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரும் வகையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் விசாரணை சுதந்திரமாக நடை பெற்று நீதி நிலைநாட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.