தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓபிஎஸ்

புதிய முதலீடுகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் பெறப்பட வேண்டும், புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட வேண்டும், வேலையில்லாத் திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும், தொழிலதிபர்களின் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்ப வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கொள்ளையர்களின் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சாதகமான தொழில்களை கண்டறிந்து, அதுகுறித்த அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி, அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, அங்கு தொழில்களை அமைக்க தொழிலதிபர்களுக்கு உதவும் மையங்களாக மாவட்ட தொழில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த நான்காண்டு கால தி.மு.க. ஆட்சியில் இவற்றின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு பொது மேலாளர் இரண்டு மூன்று மாவட்டங்களை கவனிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. ஒரு சில மாவட்டங்களில் கீழ்நிலை அதிகாரிகள் பொது மேலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மேலும், பல பொது மேலாளர்கள் ஓய்வு பெற உள்ளார்கள். இதனால், அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் திட்டப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலம் பக்கம் செல்வதாகச் செய்திகள் வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான கேரியர் குளோபல் நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு தன்னுடைய முதல் தொழிற்சாலையை இங்கு அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது 1000 கோடி ரூபாயை ஆந்திராவில் முதலீடு செய்துள்ளது. இதேபோன்று, எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஆந்திர மாநில அரசின் துரித நடவடிக்கை காரணமாக அங்கு 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இது தவிர 85,000 கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை நோக்கி வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும் என்பதோடு, தொழில் முதலீடுகளை ஈர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட தொழில் மையங்கள் அனைத்திலும் பொது மேலாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். தொழில்கள் வளர்ந்தால்தான் தொழிலாளர்கள் வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, இனி வருங்காலங்களிலாவது, மாவட்ட தொழில் மையங்களில் பொது மேலாளர்களை நியமித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.