டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தும் அளவுக்கு ஊழல் - ஓபிஎஸ் கண்டனம்

 
ops ops

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தும் அளவுக்கு ஊழல் புரிந்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க. என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் தி.மு.க.வுக்கு நிகர் தி.மு.க.தான். இதனை மேலும் நிரூபிக்கும் வகையில், கடந்த மூன்று நாட்களாக டாஸ்மாக் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், கடந்த நான்காண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி அல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், மது தயாரிப்பு நிறுவனங்கள் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அரசிற்கு சேர வேண்டிய வருமானம் மடைமாற்றி விடப்பட்டுள்ளதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஊழல் செய்வதில் முதல் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாட்டிற்கு தி.மு.க. ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

ops

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், தலைமைச் செயலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, அதுகுறித் முதலமைச்சராக இருந்த நான் அறிக்கை வெளியிட வேண்டுமென்று பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.கஸ்டாலின் அவர்கள், இன்று வாய்மூடி மவுனியாக இருப்பது 'மவுனம் சம்மதம்' என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை என்பது தனிப்பட்ட ஒன்று. இன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை என்பது சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த ஒன்று. இருப்பினும், இது குறித்து முதலமைச்சர் வாய் திறக்காமல், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

மொத்தத்தில், தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய தலைக்குனிவை தி.மு.க. அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அரசுக்கு மிகப் பெரிய வருவாயை ஈட்டித் தருகின்ற டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விரிவான அறிக்கைமூலம் தெரிவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.