"ஆவின் மூலம் காலாவதியான பால் பொருட்கள் விற்பனை" - ஓபிஎஸ் கண்டனம்!!

 
ops

 இனி வருங்காலங்களில் காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படாது என்கிற உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

ops

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பார்கள். அதாவது, எத்தனைப் பணமிருந்தாலும், வாழ்வில் வசதி இருந்தாலும் அவற்றை நுகர்வதற்கேற்ற உடல் வளம் இருந்தால்தான் அத்தனையும் பயன்படும். இதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், இந்தக் கடமையிலிருந்து தி.மு.க. அரசு தவறிவிட்டது. பொதுவாக, காலாவதியான பொருட்களை உட்கொள்வதன்மூலம் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவதுடன், வியாதிகளும் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான், உணவகம், மருந்தகம், மளிகைக் கடை, இனிப்பகம், பாலகம் போன்றவற்றில் தரமான உணவு வழங்கப்படுகிறதா, காலாவதியாகாத பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், இந்த நடைமுறையை தி.மு.க. அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக தரமற்ற உணவுப் பொருட்களை உட்கொள்ளும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, தரமற்ற பால் விநியோகம், எடைக் குறைவு, பால் பொருட்கள் தட்டுப்பாடு என மக்களைப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வரும் ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமே, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்.

ops

ஆவின் பாலகங்கள் கேட்கும் பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்வதில்லை என்றும், குறைந்த அளவில் விற்பனையாகும் தயிர், நூடுல்ஸ், இனிப்பு வகைகள், பிஸ்கெட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன என்றும், இவற்றை கட்டாயம் வாங்க வேண்டும் என்று ஆவின் பாலகங்களை ஆவின் நிறுவனம் வற்புறுத்துகிறது என்றும், இந்தப் பொருட்கள் அனைத்தும் காலாவதி காலம் நெருங்கும் நேரத்தில் விநியோகிக்கப்படுகின்றன என்றும் பால் முகவர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், ஆவின் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுக்கும், விற்பனைப் பிரிவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே என்று சொன்னால் அது மிகையாகாது. இது மட்டுமல்லாமல், மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, ஆவினுக்கு வருமானம் வந்தால்போதும் என்ற நிலையில் ஆவின் நிறுவனம் செயல்படுவது மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. திறமையற்ற அரசு தி.மு.க. அரசு என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையில்லை. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பாலகங்களும்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

ops

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பொதுமக்களின் நலன் காக்கும் வகையில், காலாவதி நிலையில் இருக்கும் பால் பொருட்களை ஆவின் பாலகங்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதை தடுக்கவும், இனி வருங்காலங்களில் காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படாது என்கிற உத்தரவாதத்தை வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.