மாணவிகள் மீது அடக்குமுறை..பெரியார் பல்கலை. துணைவேந்தரை பணிநீக்கம் செய்க - ராமதாஸ்..

 
ramadoss

பெரியார் பல்கலைக்கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ், “பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பழிவாங்கும் போக்கை எதிர்த்து போராடிய 5 மாணவிகள் மீது நிர்வாகம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்களின் நடத்தைச் சான்றிதழில் "Not Satisfactory" என்று குறிப்பிட்டு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கத் துடிக்கிறது. பழிவாங்கப்படும் மாணவிகள் செய்த ஒரே தவறு.... உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீது பல்கலைக்கழக நிர்வாகம் சுமத்திய பாலியல் புகார் பொய்யானது; பழிவாங்கும் செயல் என்று மாவட்ட ஆட்சியரிடமும், ஊடகங்களிடமும் அம்பலப்படுத்தியதும், நீதிகேட்டு போராடியதும் தான்.

salem periyar university

பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நூற்றுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசே அவரது நிர்வாகத்திற்கு எதிராக விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் துணைவேந்தரின் பழிவாங்கும் செயல்கள் தடையின்றி தொடருவதை அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் நன்நடத்தை சான்றிதழை திரும்பப் பெற்று புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். பல்கலையை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.