பிரதமரின் ஆன்மிகப் பயணத்திற்கு எதிர்ப்பு - ஜி.கே.வாசன் கண்டனம்!!

 
GK Vasan


பிரதமரின் தமிழக ஆன்மிகப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமர் அவர்களுடைய தமிழகத்தின் ஆன்மிகப் புனிதப் பணியை பற்றி அவதூறு பேசும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியின் குறுகியப் பார்வையையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது.குறிப்பாக நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி அவர்களின் 10 ஆண்டுகால பணி பெரிதும் பாராட்டத்தக்கது.

tn

பிரதமர் அவர்கள் நமது இந்திய நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பேணிப்பாதுகாப்பவர். அவர்களின் ஆன்மிக ஈடுபாட்டை இந்தியர்கள் நன்கு அறிவார்கள். உலகம் முழுவதும் பிரதமர் அவர்கள் சுற்றுப்பயணம் செய்யும் போது திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றியும், சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பற்றியும் தொடர்ந்து பேசி வருவது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கிறது.

2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார முடிவிற்குப் பிறகு பிரதமர் அவர்கள் இந்தியாவிலே ஆன்மிக இடங்களுக்கு சென்றதையும், தியானம் செய்ததையும் அனைவரும் நன்கு அறிவோம். அந்த வகையிலே உலகப்புகழ் பெற்ற தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலே அமைந்திருக்கிற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் அவர்கள் 2 நாள் தியானம் செய்வது என்பது அவரது உயர் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டு. 

stalin

இதற்கும் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்குப்பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக தொடர்ந்து பிரதமர் அவர்கள் மீது அவதூறு கூற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணி இதனை குறை கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
மேலும் தேர்தல் காலத்திலே தலைவர்கள் வெளிநாடுகளுக்கு போகலாம், குளிர் பிரதேசங்களுக்கு போகலாம், சுற்றுலா செல்லலாம். ஆனால் பிரதமர் அவர்கள் ஆன்மிக உணர்வோடு ஒரு புனித இடத்திலே தமிழகத்தில் தியானம் செய்வதை குற்றம்சாட்ட நினைப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல. இது காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியின் குறுகியப் பார்வைக்கு எடுத்துக்காட்டு. எனவே பிரதமர் அவர்களின் தமிழக ஆன்மிகப் பயணத்தை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வரவேற்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.