திருமணம் செய்த ஆதீனத்திற்கு எதிர்ப்பு- கதவை இழுத்துப் பூட்டிய கிராம மக்கள்
ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் அண்மையில் திருமணம் செய்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம் 14ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்தில் 28-வது குரு மகா சன்னிதானமாக மகாலிங்க சுவாமிகள், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி முதல் உள்ளார். இந்நிலையில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கடந்த அக்டோபர் 10ம் தேதி கர்நாடகாவில் வசித்து வரும் ஹேமாஸ்ரீ என்பவரை, பதிவுத் திருமணம் செய்து கொண்ட பதிவுச் சான்றிதழ், இணையதளங்களில் வேகமாக பரவியது. கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதை சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, சூரியனார் கோவில் ஆதீனத்திடம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணா, செயல் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றையும் பெற்றனர். திருவாவடுதுறை ஆதீனம் சார்பிலும், அறநிலைத்துறைக்கு சூரியனார் கோயில் ஆதீனத்தின் மரபு குறித்து விரிவாக அறிக்கை தரப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமிகள் ஆதீனம் மகாலிங்க சுவாமி மரபுகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே ஆதீனத்தை காப்பாற்ற மற்ற ஆதீனங்கள் துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் அண்மையில் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தஞ்சை சூரியனார் கோயில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடத்தின் கேட்டை கிராம மக்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அவர் ஆதீன மடத்தைவிட்டு வெளியேறினார். ஆதீன மடத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கக்கோரியும் அவர் கடிதம் எழுதியுள்ளார். ஒரு தரப்பினர் அவரே மடத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க, மோதலை தடுக்க 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.