எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவே அனுமதிக்கல.. இது புது யுக்தியா இருக்கு - ராகுல்..!!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு கூடியது. முதல் நாளிலேயே ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே , நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய உடனே பாஜக மூத்த எம்.பி., ஜக்தம்பிகா பால் மக்களவைக்கு தலைமை தாங்கினார்.

அப்போது பேசுவதற்காக எழுந்து நின்ற மக்களவை எதிர்கட்சிச் தலைவர் ராகுல் காந்திக்கு, வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவை நடவடிக்கைகள் மீண்டும் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அளும்கட்சி தரப்பினருக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் பேச அனுமதி கொடுக்கவில்லை. நான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். பேசுவது என் உரிமை; ஆனால் உரிமை மறுக்கப்படுகிறது. இது ஒரு புது வகையான்ம உக்தியாக இருக்கிறது. பிரதமர் அவையைவிட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் அனுமதித்தால் விவாதத்தை தொடங்கியிருக்க முடியும். அரசு தரப்பில் பேச அனுமதிக்கப்படும் பட்சத்தில், எங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதைத்தான் எடுத்துரைத்தோம்.. ஆனால் எங்களை அனுமதிக்கவே இல்லை” என்று தெரிவித்தார்./


