எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள் முடங்கியது. விடுமுறைக்குப் பின்னர் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த அமர்வு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 26 மசோதாக்களையும், மக்களவையில் 9 மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக நேற்று ஆன்லைன் சூதாட்ட தடைக்கு அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் தீர்வு காண முயற்சிக்கப்படும் என கடந்த அமர்வில் மத்திய அரசு கூறி இருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதிக்க கோரி திமுக சார்பில் கவனம் இருப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பவலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதில் மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.