திரெளபதி அம்மன் கோயில் தினசரி பூஜைகளுக்காக திறப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

 
tn

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த  ஆண்டு திருவிழாவின்போது சென்ற தலித்   இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன் மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு இந்து  ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள இந்த கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினரை வழிபடுவதற்கு அனுமதிக்காமல் மறுப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

tn

இந்த பிரச்சினையை சுமுகமாக முடிப்பதற்காக மயிலம், விக்கிரவாண்டி ,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்களும் ,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளீட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலில் பட்டியலின மக்கள் வழிப்பட எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்  பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில்  கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

high court

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையால் கடந்தாண்டு மூடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது . பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை நியமிக்கவும் அறநிலையத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.