தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறிய முதல்வருக்கு நன்றி- ஓபிஎஸ்

 
Ops

தனது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்டோருக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை ஈன்றெடுத்த அருமைத் தாய் திருமதி ஓ.பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக 24-02-2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையில் இருந்தத் தருணத்தில் நேரிலும், தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்த மேதகு தமிழ்நாடு ஆளுநர், மேதகு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர், மேதகு ஜார்கண்ட் மாநில ஆளுநர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பிற கட்சித் தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், என் உயிரினும் மேலான எனதருமை தொண்டர்கள், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள், பத்திரிக்கைத் துறையைச் சார்ந்தவர்கள், ஊடகவியல் நண்பர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தாயின் மறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாம் வல்ல இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்குகின்றன. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற மாண்புமிகு அம்மாவின் இலட்சியப் பாதையில் எனது மக்கள் தொண்டும், கழகப் பணிகளும் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.