மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம்

 
ops

தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ops

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றம் ஊத்து தேயிலைத் தோட்டங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஐந்து தலைமுறையாக அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.  

1929 ஆம் ஆண்டு, மேற்படி பகுதிகள் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டு, இதனுடைய குத்தகைக் காலம் 2028 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கிறது.  குத்தகைக் காலம் முடிவடைய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ள நிலையில், மேற்படி இடத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர வனத் துறை முயற்சி செய்கின்ற நிலையில், மேற்படி தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்தினை மேற்படி நிறுவனம் அறிவித்துள்ளதோடு, விருப்ப ஓய்விற்குப் பிறகு தொழிலாளர்கள் வசிக்கும் இடத்தினை காலி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.  இதற்கான அறிவிப்பு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
  தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுப் பலன்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவரவர் தகுதிக்கேற்ப பலன்கள் கிடைக்கும் என்றும், இதன்படி சட்டப்படி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய விருப்ப ஓய்வுப் பலன்கள், பணிக்கொடை மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான போனஸ் ஆகியவை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர் பெறக்கூடிய தொகையைக் குறிப்பிட்டு தனித்தனியே கடிதம் வழங்கப்படும் என்றும், விருப்ப ஓய்வு ஒப்பந்தம் மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்ட அலுவலகங்களில் ஜுன் 14-ம் தேதி பெற்று அன்றைய தினமே சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் மேற்படி தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வேலையின்மை மட்டுமல்லாமல் வீடற்ற நிலைமையும் உருவாகி இரட்டிப்பு பாதிப்புக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

OPS

விருப்ப ஓய்வின்மூலம் பெறும் சொற்ப தொகையை வைத்துக் கொண்டு, தோட்டத்திற்கு வெளியே சென்று வாடகைக்கு வீடு எடுத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். ஐந்து தலைமுறையாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களை விருப்ப ஓய்வில் அனுப்புவதும், அவர்களின் வீடுகளை காலி செய்யச் சொல்வதும் அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். வேலைவாய்ப்பினை உருவாக்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இருக்கிற வேலைவாய்ப்பினை பறிப்பது, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசே மேற்படி தேயிலைத் தோட்டங்களை ஏற்று நடத்த வேண்டுமென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் வண்ணம், தொழிலாளர் தரப்பினரை அழைத்துப் பேசி, மேற்படி தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.