குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடி- மறு தேர்வு நடத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

 
ops stalin

இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, குரூப் 2, 2ஏ பிரதானத் தேர்வினை ரத்து செய்வதோடு, மறு தேர்வு நடத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

Ops

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகைக் கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று நடத்தப்பட்ட குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி என குளறுபடிகளின் மொத்த உருவமாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், முன்யோசனையற்ற, திட்டமிடலற்ற, நிர்வாகத் திறமையற்ற அரசு தி.மு.க. அரசு என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பெரிய அளவில் குரூப் 4-ல் சுமார் 9,000 காலிப் பணியிடங்களுக்கும், குரூப்-2, 2ஏ -ல் சுமார் 5,500 காலிப் பணியிடங்களுக்கும் அறிவிக்கைகள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாதம், அடுத்த மாதம் என முடிவுகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதே சமயத்தில், குரூப்-2, 2ஏ -ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான பூர்வாங்கத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுகள் நேற்று நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வுகள் தாமதமாக துவங்கப்பட்டதாகவும், வினாத்தாளின் வரிசை எண்கள் மாறியிருந்ததன் காரணமாக சில மையங்களில் தேர்வு எழுதுவோரிடம் வினாத் தாள்கள் வழங்கப்படவில்லை என்றும், சில மையங்களில் கொடுக்கப்பட்ட வினாத் தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும், இவ்வாறு வினாத் தாள்கள் திரும்பப் பெறப்பட்ட மையங்களில் தேர்வு எழுதுவோர் கைபேசி மூலம் விடைகளை கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

ops

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் எவ்வளவு நேரம் தாமதமாக துவங்கப்பட்டதோ அவ்வளவு நேரம் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான மையங்களில் 9-30 மணிக்கு துவங்கப்பட வேண்டிய தேர்வு 11-00 மணி வரை துவங்கப்படாததால் தேர்வு எழுதுவோர் மத்தியில் ஒரு விதமான பதற்றம் நிலவியது. மேலும், மதியம் எழுத வேண்டிய பிரதான தேர்விற்கு திரும்பவும் மேலோட்டமாக படிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இது மிகுந்த அதிருப்தியை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. சில மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு பதற்றமில்லாத சூழ்நிலையும், பெரும்பாலான மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு இறுக்கமான, பதற்றமான சூழ்நிலையும் நிலவியதாக கூறப்படுகிறது. 

இந்தத் தேர்வில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. எனவே, இந்தத் தேர்வினை சமமாக நடத்தப்பட்ட தேர்வாக கருத முடியாது. ஒரு சாரார் பதற்றத்துடன் தேர்வு எழுதுவதும், அவர்களுக்கு மதியத் தேர்விற்கு படிக்கும் நேரம் பறிக்கப்படுவதும் ஒருதலைபட்சமான ஒன்று. தேர்வு நடத்தியதில் பெருமளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கும் தி.மு.க. அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 பெரிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது என்றால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, எழுதுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை அளிப்பது, அந்த வினாத்தாள்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை முன்கூட்டியே சரிபார்ப்பது, குறித்த நேரத்தில் தேர்வினைத் தொடங்குவது, கண்காணிப்பு பணியினை மேற்கொள்வது, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது போன்றவற்றை திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும், அரசாங்கத்திற்கும் உள்ளது. இதுபோன்ற திட்டமிடல் இல்லாததன் காரணமாகத்தான் பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வினை சரியான நேரத்தில் துவங்க முடியவில்லை. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக பெரும்பாலான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ops

 இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தினையடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முற்பகலில் நடந்த கட்டாய தமிழ் தகுதித் தாள் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் தர வரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கட்டாய தமிழ் தகுதித் தாள் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்கள் தர வரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும், தமிழ்த் தகுதித் தாளில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை அனைவரும் பெற வேண்டும் என்ற சூழ்நிலையில், தேர்வாணையத்தால் ஏற்படுத்தப்பட்ட பதற்றம் மற்றும் குழப்பம் காரணமாக குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலை மற்றும் பொது அறிவுத் தாளில் குறைவான மதிப்பெண்ணை பெறக்கூடிய சூழ்நிலை தேர்வர்களின் ஒரு சாராருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், குருப்-2, 2ஏ பிரதானத் தேர்வினை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்தப்படுவதே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு, குரூப் 2, 2ஏ பிரதானத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் மறு தேர்வினை எந்தவித குளறுபடிக்கும் இடம் அளிக்காமல் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.