பிரியாவின் மரணத்திற்கு காரணமான திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் - ஓபிஎஸ்

 
ops

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனையான 17 வயது மாணவி பிரியா, அண்மையில் வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

Ex-TN CM Panneerselvam hosptialised over Covid-related ailments

சிகிச்சையில் அவருக்கு கால் ஜவ்வு விலகியுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதனடிப்படையில் அவருக்கு கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அந்த மாணவிக்கு காலில் வலி குறையாத நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் காலில் உள்ள ஜவ்வில் திசுக்கள் அழுகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தொடர்ந்து அவரது காலும் அழுகியுள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வலது கால் நீக்கப்பட்டுள்ளது. அப்போதும் கால் அகற்றப்பட்ட பகுதியிலிருந்து வலிந்த ஒருவித அழுகல் திரவம் இரத்தம் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்துள்ளது. இதனால் உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என உறுதியுடன் இருந்த மாணவி இறுதியில் இன்று காலை மரணமடைந்தார்.

இந்நிலையில் இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது முகநூல் பக்கத்தில், “சென்னை, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையினால் இராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பு  பயிலும் கால்பந்து வீராங்கணை செல்வி ஆர்.பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இந்த மரணத்திற்கு காரணமான திமுக அரசினை வன்மையாக கண்டிப்பதோடு, ரூ.10 இலட்சம் என அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டினை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
செல்வி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.