“திமுகவுடன் இணையப்போவதில்லை; பாஜகவுடன் கூட்டணியும் இல்லை... அதிமுகவை ஒருங்கிணைப்பதே முக்கியம்”- ஓபிஎஸ்
ஜேசிடி பிரபாகர் என்னை விட்டு வெகுதூரம் சென்று பல மாதங்கள், வருடங்களாகிவிட்டது. ஆனால் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஜேசிடி பிரபாகர் என்னை விட்டு வெகுதூரம் சென்று பல மாதங்கள், வருடங்களாகிவிட்டது. ஆனால் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் தான், மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது. பிரிந்திருப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. செங்கோட்டையனுக்கு முன்பாகவே, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்தது நான் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்திற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவறான தகவல் என பிரகடனப்படுத்தி உள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம். அதன் பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியல் நிலவரம் குறித்து தான் பேசப்பட்டது.
திமுக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் இணைய உள்ளதாக வெளியாகும் தகவலும் தவறானது. எம்ஜிஆர் வகுத்து, ஜெயலலிதா அவர்களால் பின்பற்றப்பட்ட அதிமுக சட்டவிதி இன்று மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்ற எங்களின் சட்டப்போராட்டம் தொடர்கிறது. இரட்டை இலை உள்பட 6 வழக்குகள் தற்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தொண்டர்கள் எண்ணப்படி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் புகழை மறைக்க பல்வேறு கட்சிகள் முயன்றும் தோற்றிருக்கிறார்கள். அவரது புகழை யாராலும் மறைக்க முடியாது. தஞ்சை பல்கலைக்கழகத்தின் எம்ஜிஆர் பெயர் மாற்றத்திற்கு தனது கடும் கண்டனங்கள்” என்றார்.


