சந்திரயான் 3 வெற்றி- ஈபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

 
Lander

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Image


சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. நிலவில் இந்தியா கால் பதித்திருப்பதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

op

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன்மூலம் விண்வெளியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. விண்வெளியில் சரித்திரச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், சந்திராயன்-3 திட்ட இயக்குநர் திரு. P. வீரமுத்துவேல் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். விண்வெளியில் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ep

இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன். விக்ரம் லேண்டரை சீராக தரையிறக்கியதன் மூலம் வேறு எந்த உலக விண்வெளி சக்திகளாலும் செய்ய முடியாத வெற்றியை இந்தியா படைத்துள்ளது. நமது விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் திரு எஸ்.சோமநாத், திட்ட இயக்குநர் திரு.பி.வீரமுத்துவேல் அவர்களுக்கும், குறிப்பாக சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு.கே.சிவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சாதனையை சாத்தியமாக்க உதவிய மாண்புமிகு பிரதமருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.