பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம்- ஓபிஎஸ் தரப்பு

 
ops

பொதுக்குழு தொடர்பான  வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு முழு வெற்றி என கூற முடியாது என முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.

சிவில் வழக்கு மூலம் சட்டப்போராட்டம் நீடிக்கும் - ஓ. பி. எஸ் ஆதரவாளர் திருமாறன்

சென்னை தேனாம்பேட்டையில் அவரது இல்லத்தில் பேட்டியளித்த திருமாறன், “இந்த வழக்கில்  கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து எந்த உத்தரவும் இந்த தீர்ப்பில் கூறவில்லை. பொதுக்குழு மட்டுமே செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும்  சிவில் கோர்ட்டில் ஏற்கனவே உள்ள 3 வழக்குகளில்  இது குறித்து  விசாரணை நடத்திக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, சிவில் நீதிமன்றத்தில்  இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெறும் என்பதால் இதனை எடப்பாடி தரப்பினருக்கு முழு வெற்றி என கருத முடியாது.

மீண்டும் சட்டப்போராட்டம் தொடர வழிவகை செய்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்ந்து நீடிக்கிறது. அந்த வழக்கு முடியும்வரை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இயலாது. தேர்தல் நடத்த முயற்சித்தால்  நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை பெறுவோம்” என தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.