#BREAKING உதகையில் போக்குவரத்து மாற்றம்

 
s

​நீலகிரியில் கோடை திருவிழாவை முன்னிட்டு 01.05.2026 முதல்  நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யபடுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமாக உள்ளனர். இதனிடையே மே மாதத்தில் நடைபெற உள்ள கோடை விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து  உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி மே 1-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.அதில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா கார்கள் காட்டேரி சந்திப்பிலிருந்து இடதுபுறமாக திரும்பி சேலாஸ், கெந்தளா, காட்டேரிடேம், கேத்தி பாலாடா, கொல்லிமலை, லவ்டேல் வந்து மஞ்சனக்கொரை, பர்ன்ஹில் வழியாக உதகை நகருக்குள் வர வேண்டும்.

​மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர்/தொப்பக்காடு செல்லும் சுற்றுலா பேருந்துகள், வேன், கார்கள் மற்றும் மேக்சிகேப் வாகனங்கள் அனைத்தும் லவ்டேல் ஜங்ஷனிலிருந்து இடதுபுறமாக திரும்பி லவ்டேல் ரயில்வே ஸ்டேசன்,  காந்திநகர், மஞ்சனக்கொரை,  காந்தள் முக்கோணம், பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூர் அனுப்பிவைக்கப்படும்.  குன்னூரிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்து மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சுற்றுப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோத்தகிரியிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்து மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் அரசு கலைக்கல்லூரி தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சுற்றுபேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  

​உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்லவேண்டும். ஒரு சில வாகனங்கள் வெலிங்டன் பிளாக்பிரிட்ஜ், கட்டபெட்டு மற்றும் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்படும். எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் பர்லியார் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. கூடலூரிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்துகள் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்.பி.எப். கோல்ப் சாலைப் பகுதியில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அரசு சுற்றுப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூடலூரிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் தலைகுந்தா மட்டம், கோழிப்பண்னை, புதுமந்து வழியாக ஸ்டிபன்சர்ச் வழியாக நகருக்குள் வரலாம். 01.05.2026 முதல் அத்தியாவசிய பொருட்கள் (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) ஏற்றிவரும் கன ரக வாகனங்கள் தவிர, அனைத்து கனரக வாகனங்களும் காலை 08:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை உதகை நகருக்குள் வர அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.