ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்... பின்னால் வந்து கொடூரமாக தாக்கி கொன்ற புலி
உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகை அருகே உள்ள மாவனல்லா கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் காணப்பட்டைதால் மக்கள் அச்சமடைந்து வந்தனர். மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடிய புலியை கண்காணிக்க பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் நாகியம்மாள்(61) என்ற பழங்குடியின பெண் கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது புதருக்குள் மறைந்திருந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.
இதனை பார்த்து கூச்சலிட்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் பெண்ணின் உடலை தேடிச் சென்றனர் கூட்டமாக மக்கள் சென்றதை பார்த்த புலி ஓடியது. புலியால் வேட்டையாடப்பட்ட நாகியம்மாளின் தலை துண்டாக காணப்பட்டது. உடலை மீட்ட வனத்துறையினர் மசினகுடி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது கிராம மக்கள் உடலை கொண்டு செல்ல விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல் துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதனை தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைகாக உதகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. இதனிடையே புலியை டுரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் வத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வனத்துறை சார்பாக வழங்கபட்டது. தற்போது புலி தாக்கி பழங்குடியின பெண் உயிரிழக்க முதுமலை புலிகள் காப்பக நிர்வாகமே காரணம் என மாவனல்லா பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


