கடுங்குளிர்- வீட்டுக்குள் தீமூட்டிய உறங்கியவர் மூச்சுமுட்டி பலி! உதகையில் சோகம்
உதகை அருகே கடும் குளிர் காரணமாக வீட்டிற்குள் தீ மூட்டி உறங்கியதில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்த சம்பவ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயக்கமடைந்த நான்கு பேர் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பின் உடல் நலத்துடன் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தீவிரமடைந்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரங்களில் கடுமையான குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதகை அருகே உள்ள இத்தலார் பஜார் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் ஜெயபிரகாஷ்(34) என்பவர் குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நேற்று இரவு இரும்பு அடுப்பில் தீ மூட்டி வீட்டிற்குள் வைத்து உறங்கி உள்ளார்.
அவருடன் மனைவி புவனா(28), மகள் தீயாஸ்ரீ (4), மாமியார் ஈஸ்வரி(57), மாமியாரின் அக்கா சாந்தா (50) ஆகியோரும் உறங்கி உள்ளனர். அப்போது வீட்டிற்குள் புகை சூழ்ந்ததால் அதிகாலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதில் ஜெயபிரகாஷ் உயிரிழந்தார். மற்றவர்கள் மயங்கிய நிலையில் வீட்டிலிருந்து வெளியே வந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகாக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
தீவிர சிகிச்சைக்கு பின் அவர்கள் அனைவரும் நலமாக உள்ள நிலையில் இறந்த ஜெயபிரகாசின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யபடுகிறது. சம்பவம் குறித்து எமரால்டு காவல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.