உதகை - மேட்டுப்பாளையம் இனி ஒரு வழிப்பாதை
கோடை சீசன் முடிந்ததால் உதகைக்கு நாளை (ஜூன் 1) காலை முதல் வழக்கம்போல் இருவழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசனாகும். இந்த கோடை சீசனை முன்னிட்டு மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கோடை விழா கடந்த 6-ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, படகு போட்டி என பல்வேறு கண்காட்சிகள் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்டது. கடந்த ஒருமாத காலமாக நடைப்பெற்ற இந்த கோடைவிழா உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பரிசளிப்பு விழாவுடன் இன்று நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில் கோட்டாசியர் துரை சாமி அரங்குகள், கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள், மற்றும் கலை குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் மைக்கேல் ஜாக்சன் பாடல் , பக்தி பாடல், திரைப்படம் உள்ளிட்ட பாடல்களுக்கு நாட்டிய மங்கைகள் ஆடிய பரதம், கலைகுழுக்கள் ஆடிய மயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், உயிலாட்டம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோடை சீசன் முடிந்ததை அடுத்து, உதகைக்கு நாளை (ஜூன் 1) காலை முதல் வழக்கம்போல் இருவழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் தெரிவித்துள்ளார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் கோத்தகிரி வழியாக கடந்த ஒரு மாதமாக வாகனங்கள் இயக்கப்பட்டன.


