நட்சத்திர விடுதிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! நீலகிரியில் பரபரப்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தனியார் நட்சத்திர விடுதிகள் மற்றும் குன்னூரில் உள்ள 2 பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பிரபல ஓட்டல்களுக்கு சமீப காலங்களாக இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் எடுக்கப்பட்டு வருகிறது. சில மர்ம நபர்கள் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில் கடந்த மாதம் பர்னில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்த நிலையில் இன்று காலை உதகையில் உள்ள ஜம்பார்க், அக்கார்ட், உட்லண்ட்ஸ், சிங்க்லர்ஸ் ஆகிய 4 பிரபல தனியார் ஓட்டல்களுக்கும் குன்னூரில் உள்ள ஸ்டேயின்ஸ் ஆங்கில பள்ளி மற்றும் சென்மேரிஸ் ஆகிய 2 பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது.
அது குறித்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்ப இடங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உடன் சென்ற காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வரும் நிலையில் இது வரை வெடிபொருட்கள் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. ஆனாலும் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஹோட்டல்களுக்கும் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் எடுத்து வந்த ஈமெயில் குறித்த விபரங்களை நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சேகரித்து வருகின்றனர்.


