திமுகவில் கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே தலைமை பொறுப்பு - ஹெச்.ராஜா காட்டம்..
திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது, கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே கிடைக்கும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜாவின் பிறந்தநாள் விழா, காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அக்கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். இவ்விழாவிக்குப் பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ திமுகவில் 60, 70 வருடங்களாக உழைத்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இடம் கிடைக்காது. அக்கட்சியில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர தலைமைப் பொறுப்புக்கு யாரும் வர முடியாது என்பதை பிரகடனப்படுத்தவே உதயநிதி துணை முதல்வராக நியமித்துள்ளனர்.
ஏற்கனவே அவர், சனாதன தர்மத்தை மலேரியா கொசு, டெங்கு போன்று ஒழிப்பேன் என கூறினார். பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இது ஆன்மிக மாநாடு அல்ல என்றுதானே பேசினார். அப்படி என்றால் அவர் முருகனையும் ஏற்கவில்லை. இந்து மதம், இந்து கடவுளையும் ஏற்கவில்லை என்றுதான் அர்த்தம். கே.என்.நேரு ஆன்மீகவாதி என்பதால் அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை.
நீதிமன்றத்தால் கண்டிப்பாக செந்தில் பாலாஜி தண்டிக்கப்படுவார். அவர் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போது அமைச்சராக்கியுள்ளனர். பாஜகவில் எப்போதும் மோடி டீம் மட்டும்தான். எங்களுக்கு திமுக, அதிமுக ‘பி’ டீமாக இருக்க வேண்டாம். தமிழகத்தில் தினமும் கொலைகள் நடந்து வருகின்றன. என்கவுன்ட்டர் மட்டும் அதிகரிக்கவில்லை. காவல்நிலைய விசாரணைக் கைதிகூட கொல்லப்படுகிறார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று கூறினார்.