வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! BS-6 வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி..!

 
1 1

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி-நொய்டா நேரடி மேம்பால சாலை புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளது.அதன் அருகிலுள்ள சில்லா எல்லையில் காற்றின் தரக் குறியீடு சுமார் 490 ஆகப் பதிவாகி, மிகவும் ‘ஆபத்தான’ நிலையைச் சுட்டிக் காட்டியுள்ளது.

டெல்லி-என்சிஆர்-ல் உள்ள 2.88 கோடி வாகனங்களில் 93 சதவீதம் இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இவற்றில் சுமார் 37 சதவீதம் BS-3 அல்லது அதற்கும் பழைய வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களே 31 மடங்கு அதிக துகள் பொருட்களையும் 16 மடங்கு அதிக நைட்ரஜன் டை ஆக்சைடையும் வெளியிடுகின்றன.

மேலும், தலைநகரின் PM 2.5 காற்று மாசுபாட்டுக்கு இந்தவகை வாகனங்கள் சுமார் 40 சதவீதம் காரணமாக உள்ளன. எனவே, Graded Response Action Plan (GRAP) எனப்படும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் அடிப்படையில் டெல்லி காவல்துறை மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறையினர், டெல்லிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட BS6 அல்லாத வணிக மற்றும் தனியார் வாகனங்களைக் கடுமையாகச் சோதனை செய்து வருகிறார்கள்.

வாகனங்களின் வேகத்தைக் குறைத்து சோதனை செய்வதற்காக டெல்லி காவல்துறையினரால் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பில் கையடக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் வாகனப் பதிவு எண்களைப் பதிவு செய்து, BS விதிமுறைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களின் தன்மை உடனடியாகச் சரிபார்க்கப்படுகிறது.

அரசின் விதிகளை மீறிய வாகனங்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அபராதம் கட்டாத வாகனங்களைத் திருப்பி அனுப்பிவிடப்படுகிறது என்றும் கூறும் டெல்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் புதுப்பிக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் இல்லாத ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப் படுவதாகக் கூறியுள்ளனர்.

இந்தச் சுழலில் டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தால், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி மாநில அரசு அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களையும்பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

BS-6 வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. BS-2, BS-3 மற்றும் BS-4 ஆகிய வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டெல்லிக்குள் இயங்கும் வெளியூர் வாகனங்களும் அமலாக்கக் குழுவினரால் கடும் சோதனை செய்யப்படுகின்றன.

அரசால் பரிந்துரைக்கப்பட்ட மாசு உமிழ்வு தரநிலைகளில் இல்லாத வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. பெட்ரோல் நிலையங்கள் எல்லாம் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப் படுகின்றன. செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுத் தரச் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் மற்றும் விதிகளை மீறிய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. BS-VI உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பதால், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு இந்தத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மட்டுமின்றி கடுமையான மூடுபனியும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.