திருப்பரங்குன்ற சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி- நீதிமன்றம்

 
ச் ச்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா தரப்பில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு நிகழ்வில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது இந்த தர்காவை தர்கா கமிட்டி அமைத்து நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு  21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கி வரும் ஜனவரி 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் என தர்கா தரப்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு துவங்கியது இந்நிலையில் தர்கா தரப்பில் அச்சிடப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களில் கந்தூரி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மலை உச்சியில் ஆடு கோழி பலியிட கூடாது என்றும் அதற்கான தீர்வை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் தர்கா தரப்பில் இதுவரை உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் கந்தூரி  நடைபெறும் என்றும் அதற்காக மாவட்ட நிர்வாக தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  மூன்று நீதிபதிகள் அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இது குறித்து புகார் கொடுத்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "ஏற்கனவே மதுரை அமர்வு, மலை உச்சியில் கால்நடைகளை பலியிடவும், அசைவ உணவுகளை பரிமாறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், "சந்தனக்கூடுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க மாட்டோம்" என தெரிவிக்கப்பட்டது. தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல.  ஒரே கோரிக்கையை வலியுறுத்தி 2 முறை மனு தாக்கல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.  திருப்பரங்குன்றம் மலை உச்சிலேயே கந்தூரி விழா நடத்தக் கூடாது என உத்தரவு உள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் அல்ல. மலைக்குக் கீழே கந்தூரி நடத்தலாம்" என தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் தரப்பில், "மலை உச்சியில் கால்நடைகளை பலியிடுதல் மட்டுமல்ல, அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "இடைக்கால உத்தரவுடன், பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடுவதாக தெரிவித்தார். அரசுத்தரப்பில், இரு தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என குறிப்பிட்டப்பட்டது. அதற்கு நீதிபதி, "அவ்வாறு பாதிக்கப்பட்டாலும், ஏற்கனவே பாதிக்கப்பட்டதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல ஏற்கனவே பலியிடுதல் குறித்து வழக்கு தாக்கல் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்வது விசாரணைக்கு ஏற்கக் கூடாது. மேலும் ஆடு கோழி பலியிட தான் தடை உள்ளது கந்தூரி என்ற வார்த்தைக்கு தடை இல்லை நாங்கள் தரையில் நடத்திக் கொள்வோம் என்றார். தற்போது அர்ஜுன் சம்பத் என்பவர் வந்து, "பாகிஸ்தான் கொடி ஏற்றுவதாகவும் தற்போதும் இறந்த நபர்களை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் புதைப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு எங்களையே ஒடுக்குகிறது" என தெரிவித்தார். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி,  இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது, தர்கா நிர்வாக கமிட்டியினர் சந்தனக் கூடு உரூஸ் விழாவை தனியாக நடத்த வேண்டும். விழாவில் 50 பேர் மட்டுமே.பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் விலங்குகளை எடுத்துச் செல்வது, அசைவ உணவு சமைப்பது மற்றும் அசைவ உணவை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த  உத்தரவு மலையின் அடித்தளத்தில் இருந்து மலையின் உச்சி வரை அமல்படுத்தப்படும். இந்த  உத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். நீதிமன்ற  தீர்ப்புகள் மற்றும் பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை  காவல்துறை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். வழக்கு தொடர்பாக அரசு மற்றும் தர்கா தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.