சேலத்தில் தவெக கூட்டத்தில் 4998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி..!!
சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டம் நாளை(பிப். 13) நடைபெறவுள்ளது.
முதலில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், மனுவில் வரைபடம் இணைக்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளை காவல் துறை எழுப்பியிருந்தது. இதையடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பதிலாக, குறிப்பிட்ட தேதியில் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியது.
முக்கிய நிபந்தனையாக அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், த.வெ.க. தலைமை நிலையச் செயலகம் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
”மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம்.
இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

