தங்கம் விலையை மிஞ்சும் வெங்காயம்! இனி சின்ன வெங்காயம் வாங்கணும்னா யோசிக்கணும்...!!
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெய்த மழை காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்துக் குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு
இது குறித்து கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காய வியாபாரி ரமேஷ் கூறுகையில், "சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் கிலோ ரூபாய் 60 முதல் ரூபாய் 65 வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது ரூபாய் 70 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த மாதம் ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது கிலோ ரூபாய் 230- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, முருங்கைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், முள்ளங்கி உள்ளிட்டப் பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய், தற்போது அதிகபட்சமாக ரூபாய் 150- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் 30- க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ரூபாய் 70 முதல் ரூபாய் 80 ஆகவும், ரூபாய் 30 முதல் ரூபாய் 40 வரை விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் ரூபாய் 80 ஆகவும் உயர்ந்துள்ளது. ரூபாய் 25 முதல் ரூபாய் 30 வரை விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி தற்போது ரூபாய் 50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை உயர்ந்துள்ளது காய்கறிகளின் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். முருங்கைக்காயைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் பருவம் முடிவடைவதும் விலை உயர்வுக்குக் காரணம். கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு 150 முதல் 160 டன் வரை சின்ன வெங்காயம் வரத்து இருக்கும். ஆனால், தற்போது 30 முதல் 40 டன் அளவுக்குத்தான் வரத்து உள்ளது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
சின்ன வெங்காயத்தின் சாகுபடியைக் குறைத்த விவசாயிகள்
தமிழ்நாட்டில் திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், பேராவூரணி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால், இந்த முறை பல விவசாயிகள் சாகுபடியைக் குறைத்துள்ளனர். வழக்கமாக சாகுபடி செய்யும் விவசாயிகளில் பாதி பேர் மட்டுமே இந்த முறை சாகுபடி செய்துள்ளனர். இதனால் சந்தைக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்த மாதம் முழுவதும், அடுத்த மாதம் 15- ஆம் தேதி வரையிலும் காய்கறி விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது. சில காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம். குறிப்பாக, பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 90 வரையும், சின்ன வெங்காயம் ரூபாய் 300 வரையும் விலை உயர வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் காய்கறிகள் கிலோவுக்கு மேலும் ரூபாய் 20 முதல் ரூபாய் 30 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
புஞ்சைப் புளியம்பட்டி சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை எவ்வளவு?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி ஆர்வம் காட்டவில்லை. இதனால் வழக்கத்தை விட குறைவான ஹெக்டேரிலே விவசாயிகள் சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்திருந்தனர். இதன் காரணமாக, புஞ்சைப் புளியம்பட்டி சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 200- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புஞ்சைப் புளியம்பட்டி சந்தையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 140 வரை விற்பனையான நிலையில், தற்போது ரகத்திற்கு ஏற்ப ரூபாய் 180 வரையும், சில்லறை விற்பனையில் ரூபாய் 200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து புஞ்சைப் புளியம்பட்டி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைவு காரணமாகதான் விலை உயர்ந்துள்ளது. மைசூரு பகுதியில் இருந்து வர வேண்டிய சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது இல்லை. தற்போது விதைக்கப்பட்ட வெங்காயம் அறுவடைக்கு வர இன்னும் இரண்டு மாதம் ஆகும் என்பதால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு டிசம்பர் இறுதிவரை நீடிக்கும். கடந்த 2023- ஆம் ஆண்டு ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 180 ரூபாய்க்கு விற்பனை செய்ததுதான் அதிகபட்ச விலை ஆக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏக்கருக்கு 1,100 கிலோ மகசூல் கிடைக்கும்
சத்தியமங்கலம் வேளாண்மை அலுவலர் முருகன் கூறுகையில், "ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் சின்ன வெங்காய பயிர் நடவுச் செய்யப்பட்டு 80 நாட்களில் அறுவடைக்கு வரும். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் வெங்காய சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், கிணற்று பாசனம் மூலம் தாளவாடி, சத்தியமங்கலம், வாணிப்புத்தூர், புஞ்சைப் புளியம்பட்டி பவானிசாகர் பகுதியில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் வேர் அழுகல் நோயால் வரத்து குறைந்து மகசூல் பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா பகுதியில் சின்ன வெங்காயம் நடவு நடந்து வருகிறது. தற்போது ஏக்கர் ஒன்று ரூபாய் 2.50 லட்சம் செல்வாகிறது. 70 நாள்களுக்கு பின் ஏக்கருக்கு 1,100 கிலோ மகசூல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

