கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு..!!

 
onion thol benefits

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட முதல் ரக நாசிக் வெங்காயம், நேற்று ரூ.54 முதல் ரூ.60 வரை விற்பனையானது. ஆகஸ்டு மாத விலையுடன் ஒப்பிட்டால் 71.43 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் இருப்பதால், அதன் விலை உயர்வு பொதுமக்களிடம் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து உள்ளது. வரலாற்றிலும் வெங்காய விலை உயர்வு அரசியலில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்த நிகழ்வுகள் உள்ளன.

கடந்த ஆண்டு வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காததால், மராட்டிய மாநிலத்தில் பல விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடியை குறைத்துள்ளனர். மேலும், எத்தனால் தயாரிக்க கரும்புக்கான தேவை அதிகரித்துள்ளதால், மராட்டிய விவசாயிகளில் பலர் கரும்பு சாகுபடிக்கு மாறியதும் வெங்காய உற்பத்தி குறைவுக்கு காரணமாகியுள்ளது.

கோயம்பேட்டுக்கு மராட்டியத்தில் இருந்து தினமும் சுமார் 30 டன் வெங்காயம் ஏற்றிய 35 லாரிகள் வருவது வழக்கம். தற்போது 15 முதல் 18 லாரிகள் மட்டுமே வருகின்றன. பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து 15 டன் கொள்ளளவு கொண்ட 8 முதல் 10 லாரிகளும், கர்நாடகாவில் இருந்து 10 முதல் 12 லாரிகளும் தினமும் வரவழைக்கப்படுகின்றன.