தண்ணீரில் மூழ்கி ஒன்னறை வயது குழந்தை உயிரிழப்பு!

 
water

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வேம்பனூர்,  கல்தோண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூமாரி. இவர்களுக்கு நீலா ஸ்ரீ என்ற 18 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான வேம்பனூர் வந்த சுப்பிரமணியன் நேற்று பிற்பகலில் வீட்டினுள் தூங்கியுள்ளார். 

குழந்தை நீலாஸ்ரீயை வீட்டின் முன்பு உள்ள வேப்பமரத்தில் தொட்டில்கட்டி தூங்க வைத்துவிட்டு தாயார் பூமாரி கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் மாலை தந்தை விழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. தேடிப் பார்த்தபோது வீட்டில் இருந்து 400 மீட்டர் தூரமுள்ள வேம்பனூர் ஆற்றின் பள்ளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து கிடந்தது. இது குறித்து இலுப்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தீயணைப்புத் துறையினர் அங்கு வருவதற்குள் ஆற்றின் பள்ளத்தில் விழுந்த  குழந்தையின் உடல் அப்பகுதி பொதுமக்களால் மீட்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் வேம்பனூர் ஆற்றைக் கடந்துதான் சுப்ரமணியனின் தோட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் தினசரி பூமாரி தனது குழந்தையை அவ்வழியாக தோட்டத்திற்கு அழைத்து சென்று வந்ததோடு ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் குழந்தையை குளித்து விடவும் செய்துள்ளார். இந்த சூழ்நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை தனது தாயைத் தேடி வழக்கமாக செல்லும் பாதையில் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்க படுகிறது.