தண்ணீர் பக்கெட்டுக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமி கழிவறை சென்ற நேரத்தில், 1 வயது ஆண் குழந்தை பாத்ரூம் பக்கெட்டில் தலைக்குப்புற கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முனீர் பாஷா(32) மனைவி ரேஷ்மா பானு(23) மற்றும் மனைவியின் தங்கை ஷபானா பானு(17) என்பவருடன் 5 வருடமாக சொந்த வீட்டில் வசித்து வருகிறார் . முனீர் பாஷா தனது பெரிய மகனான முகமது அர்ஷத்(3) என்பவரை தன்னுடன் பார்னிச்சர்கடை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்ல அவரது மனைவி ரேஷ்மா பானு 17 வயது தங்கையான ஷபானா பானு என்பவரிடம் அவரது ஒரு வயது குழந்தையை பார்த்துக்கச் சொல்லி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் சபானா பானு கழிவறை சென்றுள்ளார். குழந்தை தவழ்ந்து சென்று குளிக்கும் பாத்ரூமில் உள்ள பக்கெட்டில் தலை குப்புற விழுந்துள்ளது. அதில் பாதி அளவு தண்ணீர் இருந்ததால் குழந்தை மூச்சு திணறி அசைவற்று இருந்தது. பின்னர் சபானா பானு கழிவறையிலிருந்து வந்து பார்க்கையில் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து கிடந்துள்ளது. உடனே குழந்தையின் அம்மாவிற்கு தகவல் தெரிவித்து பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் உதவியுடன் குழந்தையை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

