குட்கா, பான் மசாலா குட்கா பொருட்களுக்கு ஓராண்டு தடை

 
gutka

குட்கா , பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

gutka

கடந்த 2006 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா , புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார்.  இதையடுத்து இது தொடர்பான தொடர்ந்து அறிவிப்பாணைகளும் வெளியிடப்பட்டு வந்தன.  இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தது.  அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும் ,  குற்ற நடவடிக்கையை எதிர்த்தும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்கு விசாரணையின் போது,  குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கு புதிதாக அரசாணை வெளியிடவும் அனுமதியளித்தது. 

gutka

இந்நிலையில் தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவைக்கு மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர்  புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.