உடுமலை அருகே கூட்டாற்றில் பரிசல் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
பரிசலில் ஆற்றைக் கடக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்ததில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆனைமலை புலிகள் காப்பகத்துககு உட்பட்ட இங்கு 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பழங்குடி இன குடியிருப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தளிஞ்சி வயல் என்ற மலை கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (40) மற்றும் மது ஆகிய இருவரும் தங்களது கிராமத்துக்கு செல்ல சின்னார் வனப்பகுதி வழியாக அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக செல்லும் கூட்டாறு என்ற ஆற்றை கடக்க முயற்சித்தனர். பாலம் இல்லாத காரணத்தால் பரிசல் மூலம் இருவரும் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல முயற்சித்தனர்.
ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து இருந்ததால் இவர்கள் சென்ற பரிசல் கவிழ்ந்தது. தண்ணீரில் விழுந்த இருவரும் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் செடி கொடிகளை பிடித்து மது தப்பித்துவட்டார். ஆனால் மாரியப்பன் நீரில் மூழ்கி பலியானார். இதனை தொடர்ந்து மலை கிராமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடததுக்கு உடனடியாக வந்து இறந்த மாரியப்பனின் உடலை மீட்டனர். இதன்பின் தங்களது சொந்த கிராமத்துக்கு எடுத்துச் சென்ற முயற்சித்தபோது வனத்துறை காவல்துறை தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆனால் மலை கிராம மக்கள் தங்கள் பிரேத பரிசோதனைக்கு உடலை வழங்க மாட்டோம், எங்கள் வழக்குப்படி நாங்கள் அடக்கம் செய்து கொள்கிறோம் என உடலை எடுத்துச் சென்று தகனம் செய்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களது மலை கிராமத்துக்கு செல்ல பாலம் ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


