வனப்பகுதிக்குள் நுழைந்தவரை புரட்டி எழுத்த யானை! பரிதாபமாக பறிபோன உயிர்

 
முதுமலையில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..  முதுமலையில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Death

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின கிராமங்களில் தற்போது சீசன் காரணமாக பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து இப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன. கோத்தகிரி அருகே உள்ள வாகப்பனை கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் காரமடை (வயது 33). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை 5 மணிக்கு சொந்த வேலையாக கோத்தகிரிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். வாகப்பனை கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கூட்டாடா கிராமத்திலிருந்து வாகப்பனைக்கு செல்வதற்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண் சாலையில் நடந்து சென்றுள்ளார். செல்லும் வழியில், எதிர்பாராத விதமாக அங்கிருந்த புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை அவரை பலமாக தாக்கி தூக்கி வீசியுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தொட்டில் கட்டி கூட்டாடா கிராமத்திற்கு கொண்டு சென்று, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாத நிலையில்,  கடந்த ஆண்டும் இதே போல கிராமத்திற்கு நடந்து சென்ற  3 பேரை காட்டு யானை தாக்கியது குறிப்பிடத்தக்கது காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.