கதண்டு கடித்து ஒருவர் பலி! வேலைக்கு சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டிட வேலைக்கு சென்றவர்களை கதண்டு கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை , பாலைவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் (32), ஆறுமுகம் (55) இருவரும் கட்டிட வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று எட்டியத்தளி பகுதிக்கு கட்டிட வேலை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். மாங்குடி அருகே சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக அங்கே இருந்த தென்னந்தோப்பிலிருந்து கதண்டுகள் தாக்கியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள ஆறுமுகத்திற்கு தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டிட வேலைக்கு சென்றவர்களை கதண்டு கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


