முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த முத்தான திட்டம் என்னவென்றால் அது கஞ்சா விற்கும் திட்டம் தான் - இபிஎஸ் விமர்சனம்..!

 
eps
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது, "முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளை வரையறை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று பேசுகிறார். தொகுதி வரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது. பிறகு எதற்காக முதல்வர் அதையே பேசிக்கொண்டு இருக்கிறார் என்றால், நம்மைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.

அதிக திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி.நகர் தொகுதிக்கு அவர் கொண்டு வந்த முத்தான திட்டம் என்றால், கஞ்சா விற்கும் திட்டம். அதுதான் சிறப்பாக நடக்கிறது. வேறு எந்த புதிய திட்டமும் சென்னை மக்களுக்குக் கிடைக்கவில்லை.

என்னை அடிமை பழனிசாமி என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல் மீண்டும் மீண்டும் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். நானும் பலமுறை பதில் சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல, எங்கள் தொண்டர்கள், யாருக்கும் அடிமை இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பள்ளியில் படித்த நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தரும் எந்த திட்டமாக இருந்தாலும் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டத்தை கொண்டு வந்தால் அதை எதிர்த்து முறியடிப்போம். இது தான் எங்கள் கொள்கை. உங்களைப் போன்று ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் அடமானம் வைக்க மாட்டோம்.

சட்டமன்ற தேர்தலுக்காக எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி, 2 மணி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிவு செய்து, தொகுதிகளை அறிவித்தோம். ஆனால், திமுக கூட்டணியில் 20 நாட்கள் கழித்துதான் கூட்டணியே முடிவானது.

அதற்கு பிறகு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை ஜெட் வேகத்தில் வெளியிட்டோம். ஆனால்,
10 நாட்கள் கழித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டு, திமுகவை காப்பியடித்தோம் என்று ஸ்டாலின் பேசுகிறார். முதலில் வெளியிட்டது நாங்கள் என்றால் யார் யாரை பார்த்து காப்பியடித்திருப்பார்கள்?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்குகூட நிறைவேற்றவில்லை.
தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்று முதல்வர் ஸ்டாலின் புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டதால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேச மறுக்கிறார்.

திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்வு, குடிநீர், குப்பைக்கு கூட வரி. அதுமட்டுமல்ல கழிவறை பராமரிப்பதிலும் கூட ஊழல் செய்தது சென்னை மாநகராட்சியில் உள்ள திமுக அரசு தான்.

திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய ரூ.10,000 உதவித்தொகை வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். புதிதாக ரூ.2 லட்சம் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும். மாணவர் கல்விக் கடன், விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.